மாணவி சாவில் மர்மம்: பிணத்தை வாங்க மறுத்து 2-வது நாளாக சாலை மறியல்
தேனி அல்லிநகரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவியின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி பிணத்தை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
அல்லிநகரம்,
தேனி அல்லிநகரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி ஜெயா (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களுடைய 2-வது மகள் ராகவி (12). இவள் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 25-ந்தேதி இவளுடைய பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.
ராகவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாள். இந்நிலையில் அவள் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் கிடைத்தது ஜெயா அங்கு வந்தார். தகவல் அறிந்து அல்லிநகரம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டதாக அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே மாணவியின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவளுடைய உடலில் காயங்கள் இருப்பதால் அவள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்யும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்று கூறி பிரேத பரிசோதனை முடிந்தும் பிணத்தை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றம் செய்யக்கோரியும், கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில், நேற்று காலையில் ராகவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அல்லிநகரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்துவதாகவும், வழக்கை கொலை வழக்கமாக மாற்றாமல் உள்ளதாகவும் கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிக்குமார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 4 மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2-வது நாளாக பிணத்தை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story