தேவதானப்பட்டி அருகே: இடிந்து விழுந்த தொகுப்பு வீடு


தேவதானப்பட்டி அருகே: இடிந்து விழுந்த தொகுப்பு வீடு
x
தினத்தந்தி 28 Sept 2018 3:30 AM IST (Updated: 28 Sept 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தேவதானப்பட்டி, 

தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜெயமங்கலம் ஊராட்சியில் உள்ளது இந்திரா காலனி. இங்கு 1992-ல் வீடு இல்லாத ஏழைகளுக்கு 45 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் கட்டப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதன்பிறகு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை.

இதனால் அந்த வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்பட்டு எப்போது இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. இதுதவிர மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. உயிர் பயத்திலேயே அந்த வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முருகன் என்பவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்து தரைமட்டமானது. அந்த வேளையில் முருகன் கூலி வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி மயில் மற்றும் 2 குழந்தைகளும் வீட்டில் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பீரோ, டி.வி. மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது. இதன்மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் அதே பகுதியில் உள்ள பலரின் வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. எனவே உயிர்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த வீடுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதிக்கு அருகில் தனியார் கல் குவாரி உள்ளது. இங்கு தினமும் இரண்டு வேளைகளில் வெடி வைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சத்தத்தால் வீடுகளே குலுங்குகிறது. அந்த சமயத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து விடுகிறோம். வீடுகள் ஏற்கனவே சேதமடைந்த நிலையில் இருக்கிறது. வெடி வெடிக்கும் அதிர்வில் வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிகளில் பார்வையிட்டு சேதமடைந்த வீடுகளை சீரமைக்கவும், கல்குவாரியை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story