மலைப்பாதையில் மினிலாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல்
கம்பம்மெட்டு மலைப் பாதையில் மினிலாரி பழுதாகி நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கம்பம்,
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல குமுளி, கம்பம்மெட்டு மற்றும் போடிமெட்டு மலைப்பாதைகள் உள்ளன. இதில் குமுளி மலைப்பாதையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மாதாகோவில் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சீரமைப்பு பணி நடைபெற்றது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் மீண்டும் அந்த இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி கடந்த 26-ந் தேதி முதல் குமுளி மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி குமுளி மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு வழியாக சென்று வருகின்றன.
கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு செல்ல 13 கி.மீ. தூரம் ஆகும். இந்த மலைப்பாதையில் பல்வேறு அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும் பாதை பல இடங்களில் செங்குத்தாகவும், குறுகலாகவும் உள்ளன. குறிப்பாக எதிரெதிர் வரும் வாகனங்கள் விலகி செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த மலைப்பாதையில் சென்ற மினிலாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் மலைப்பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த மினிலாரியில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.
குமுளி மலைப்பாதை மூடப்பட்டதால் கம்பம்மெட்டு மலைப்பாதையில் வழக்கத்தை விட இருமடங்கு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story