மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி


மின்னல் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 28 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

குஜிலியம்பாறை,


குஜிலியம்பாறை பகுதியில் நேற்று மாலை 5.30 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் குஜிலியம்பாறை அருகே ராமகிரியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). விவசாயி. இவர் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது, தோட்டத்தில் பசு மாட்டில் பால் கறப்பதற்கு சென்றார்.

அப்போது மின்னல் தாக்கியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த கணேசனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதேபோல் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்தது. அப்போது வேடசந்தூர் அருகே உள்ள குளத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு பணி செய்து கொண்டிருந்த சாமிமுத்தன்பட்டியை சேர்ந்த சிங்கராயர் மனைவி மரியசெல்வம் (35) என்பவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மரியசெல்வம் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மரியசெல்வத்துக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதில் அப்சர்வேட்டரியில் 28.8 மில்லி மீட்டர் மழை அளவும், போட் கிளப்பில் 22.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. இதன் காரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் மனோரஞ்சிதம் அணை, பழைய அணை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று பகல் 2 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நகரை ஒட்டிய நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டியது. அத்துடன் நகரில் உள்ள நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிலக்கோட்டையில் மாலை 4.45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1½ மணி நேரம் நீடித்தது. இந்த மழைக்கு குமுண்டான் குளத்தின் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. அந்த தண்ணீர் நால்ரோடு பகுதியில் பெருக்கெடுத்து ஓடியதால், அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் வத்தலக்குண்டு, செந்துறை, சமுத்திராபட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, மணக்காட்டூர், ஆலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. 

Next Story