ஆலங்குளம் அருகே பராமரிப்பின்றி கிடந்த பூங்காவை சீரமைத்த இளைஞர்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க கோரிக்கை
ஆலங்குளம் அருகே பராமரிப்பின்றி கிடந்த பூங்காவை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சீரமைத்தனர். இதையடுத்து அங்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே பராமரிப்பின்றி கிடந்த பூங்காவை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சீரமைத்தனர். இதையடுத்து அங்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பின்றி கிடந்த பூங்கா
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இங்கு பிரதான தொழிலாக விவசாயம் நடந்து வருகிறது. பெண்களில் பெரும்பாலானோர் பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றனர். தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ள இக்கிராமத்தில் மாணவர்கள் மேல்நிலை கல்விக்கு ஆலங்குளம் செல்கின்றனர்.
கிராம இளைஞர்கள் ஓய்வு நேரங்களில் விளையாடும் பொருட்டு சில ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் விளையாட்டு பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள், சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள், நடைபாதை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன. காலப்போக்கில் உபகரணங்கள் பழுதடைந்ததோடு, விளையாட்டு பூங்காவும் பராமரிப்பின்றி முள் புதர்கள் மண்டி பயன்பாடின்றி கிடந்தது.
இளைஞர்கள் சீரமைத்தனர்
இந்நிலையில் இளைஞர்கள் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக கழிப்பதற்காக விளையாட்டு திடலை சீரமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் இதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிராமத்தை சேர்ந்த சுமார் 60 இளைஞர்கள் கொண்ட குழுவினர் விளையாட்டு திடலை சீரமைக்கும் முயற்சியில் இறங்கினர். கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நிறைவுபெற்றது.
விளையாட்டு திடல் தற்போது இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட தயார் நிலையில் உள்ளதாகவும், விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story