‘மாணவர்கள் முயன்றால் இந்தியாவை தூய்மையாக்கலாம்’ சுங்கத்துறை அதிகாரி பேச்சு


‘மாணவர்கள் முயன்றால் இந்தியாவை தூய்மையாக்கலாம்’ சுங்கத்துறை அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 28 Sept 2018 4:00 AM IST (Updated: 28 Sept 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் முயன்றால் இந்தியாவை தூய்மையாக்கலாம் என்று சுங்கத்துறை அதிகாரி கூறினார்.

மதுரை,

தமிழக சுங்கத்துறை சார்பில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு முகாம் கோசாக்குளம் சி.இ.ஓ.ஏ. பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைவர் ராஜா கிளைமாக்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திருச்சி சுங்கத்துறை முதன்மை கமிஷனர் ரஞ்சன்குமார் ரவுத்ரோ, மதுரை சுங்கத்துறை உதவி கமிஷனர் டாக்டர் வெங்கடேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முதன்மை கமிஷனர் ரஞ்சன்குமார் ரவுத்ரோ பேசியதாவது:-

தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். தற்போது 4 வருடங்கள் நிறைவு பெற்று விட்டது. அரசு மட்டும் நினைத்தால் இந்தியாவை தூய்மையாக்க முடியாது. அரசிற்கு மக்களும் உதவி செய்ய வேண்டும். அப்போது தான் தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியும். மத்திய வருவாய்த்துறை சார்பில் தூய்மை இந்தியா குறித்து 7 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தற்போது 8-வது இடமாக மதுரையில் நடக்கிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வருகிற 2-ந்தேதி வரை தொடர்ச்சியாக நடக்க இருக்கிறது.

மாணவர்கள் நினைத்தால் எந்தவொரு செயலையும் செய்து முடிக்கமுடியும். அவர்கள் நினைத்தால் இந்தியாவை தூய்மையாக வைத்து கொள்ளலாம். அதற்காக தான் இந்த நிகழ்வுகளை மாணவர்கள் மத்தியில் நடத்தி வருகிறோம்.

50 சதவீத கிராமங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்கு தூய்மை பணியை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு பேசும்போது, “ஸ்வட்ச் பாரத் கிளன் இந்தியா“ என்ற இணையதள முகவரியில் சென்று தூய்மை இந்தியாவாக உருவாக்குவது குறித்து பிரதமருக்கு ஆலோசனைகள் வழங்கலாம்.

தூய்மை இந்தியா திட்டத்தினை மேம்படுத்துவதற்கு மாணவர்கள் தங்களுக்கு தோன்றும் யோசனைகள், தகவல்களை அந்த பக்கத்தில் பதிவிடலாம் என்றார். முன்னதாக பள்ளி வளாகத்தில் சிறப்பு விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைவர் சாமி, துணை தலைவர்கள் விக்டர் தனராஜ், சவுந்திரபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story