ராமேசுவரத்தில் சிக்கிய ஜோடி: 65 வயது ஆசிரியர் பஞ்சாப் சிறையில் அடைப்பு 20 வயது மாணவி பெற்றோருடன் சென்றார்


ராமேசுவரத்தில் சிக்கிய ஜோடி: 65 வயது ஆசிரியர் பஞ்சாப் சிறையில் அடைப்பு 20 வயது மாணவி பெற்றோருடன் சென்றார்
x
தினத்தந்தி 28 Sept 2018 5:00 AM IST (Updated: 28 Sept 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் சிக்கிய காதல் ஜோடி பஞ்சாப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 65 வயது ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். 20 வயது மாணவி பெற்றோருடன் சென்றார்.

மதுரை,

பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிஷன் (வயது65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தன்னிடம் கல்வி கற்க வந்த மாணவி மகக் (வயது20) உடன் காதல் கொண்டார். தங்களது முரண்பட்ட இந்த காதலை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று எண்ணிய இந்த ஜோடி, பஞ்சாபில் இருந்து ராமேசுவரத்திற்கு வந்து விட்டனர்.

மகக் காணாமல் போனதால், அவரை கண்டுபிடித்து தரும்படி அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார், செல்போன் சிக்னல் மூலம் இந்த ஜோடி ராமேசுவரத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் ராமேசுவரம் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். களத்தில் இறங்கிய ராமேசுவரம் போலீசார், இந்த ஜோடியை அங்குள்ள தனியார் ஓட்டலில் பிடித்தனர். பின்னர் இது குறித்து பஞ்சாப் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, அந்த ஜோடியை விமானம் மூலம் உடனடியாக பஞ்சாப் அழைத்து சென்றனர்.

அவர்களை அபோகர் சப்-டிவிசனல் கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த மாணவி மகக் உறவினர்கள் கோர்ட்டுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் மகக்கிடம், “இது தவறான உறவு. எனவே அவரை பிரிந்து நீ வர வேண்டும்“ என்று அறிவுரை கூறினர். ஆனால் மகக் அவர்களிடம் பதில் ஏதும் பேசாமல் அமைதி காத்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் மாஜிஸ்திரேட்டு அம்ரீஷ் குமார் முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மகக் வாக்குமூலம் அளித்தார். அதில் “எனது விருப்பத்தின் பேரில் தான் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிஷன் உடன் சென்றேன். என்னை அவர் கடத்தி செல்லவில்லை. எனது விருப்பத்தின் பேரில் அவர் என்னுடன் வந்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை காதலித்து கணவராக ஏற்றுக்கொண்டேன். எனது கணவனுடன் செல்ல எனக்கு உரிமை உள்ளது. ஓராண்டுக்கு முன்பே திருமணம் செய்து விட்டேன். எனவே எங்களை பிரிக்க கூடாது என்றார்.“

அதற்கு மாஜிஸ்திரேட்டு, “திருமணத்திற்குரிய பதிவு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கூறினார். ஆனால் அதற்கு மகக் பதில் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தார். இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு, “மகக் விருப்பத்தின் பேரில் சென்றதாக கூறுகிறார். எனவே போலீசார் அவரிடம் முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும். அதுவரை மகக் நலன் கருதி அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும். அவர் செல்ல மறுத்தால் விடுதியில் வைத்து இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசிரியர் ஜெய்கிஷன் செய்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மகள் வயதுடைய ஒருவரை திருமணம் செய்ய முடியுமா? மாணவியை மனைவியாக ஏற்று கொள்ளலாமா? அவரே விருப்பப்பட்டு வந்தாலும், அவருக்கு புத்திமத்தி சொல்லி இருக்க வேண்டாமா? ஜெய்கிஷனை இதில் இருந்து விடுவித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும். எனவே ஜெய்கிஷனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்“ என்றார்.

இதைத்தொடர்ந்து ஜெய்கிஷன் அபோகர் நகர சிறையில் அடைக்கப்பட்டார். மகக் அவர் பெற்றோருடன் செல்வதற்கு முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன்பின்பு போலீசார் அவரிடம் சமரசம் பேசி பெற்றோருடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதே நேரத்தில் மாணவி மகக் கை துன்புறுத்தக்கூடாது என்று பெற்றோரிடம் கண்டிப்புடன் கூறினர். இதைத்தொடர்ந்து மகக் பெற்றோருடன் செல்வதற்கு சம்மதம் தெரிவித்து அவர்களுடன் சென்றார்.

Next Story