முதல்முறையாக ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்


முதல்முறையாக ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்
x
தினத்தந்தி 28 Sept 2018 5:30 AM IST (Updated: 28 Sept 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

முதல்முறையாக ஸ்கூபா டைவிங் மூலம் வனத்துறையினர் கடலுக்கடியில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிலும் டால்பின்,கடல் ஆமை,பவளப் பாறைகள்,கடல் புல்,கடல் விசிறி உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகஅளவில் வாழ்ந்து வருகின்றன.இதேபோல பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும் மண்டபம், தொண்டி, ராமேசுவரம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஊர்களிலும் உள்ள கடல் பகுதியிலும் பவளப்பாறைகள் அதிகஅளவில் உள்ளன.

இந்நிலையில் கடலுக்கு அடியில் வாழும் பவளப்பாறைகள் மற்றும் கடல் புல் உள்ளிட்ட அரிய கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதா என்பதை கண்டறியவும், கடல் வளத்தை பாதுகாப்பதற்காகவும் ராமநாதபுரம் மாவட்ட வன உயரின காப்பாளர் அசோக்குமார் உத்தரவின்பேரில் மண்டபம்,ராமநாதபரம் வனச்சரகத்திற்குட்பட்ட 5 வேட்டை தடுப்பு காவலர்களுக்கு கடந்த 24-ந் தேதி முதல் மண்டபம் தோணித்துறை பகுதியில் கடலுக்கு அடியில் நீந்தி செல்வது குறித்து ஸ்கூபா டைவிங் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

பயிற்சியில் மண்டபம் வனச்சரகர் சதீஷ்,கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர்பாஷா,மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக் கட்டளை வனச்சரகர் ரகுவரன், வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் அரவிந்த்தருண்ஸ்ரீ வனத் துறையினருக்கு பயிற்சி அளித்தார்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்களும் மண்டபம் தோணித்துறை கடலான பாக்ஜலசந்தி கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் நீச்சல் மூலம் பவளப்பாறைகளை ஆய்வு செய்தனர்.அப்போது பவளப் பாறைகளில் புகையிலை பாக்கெட்டுகள்,பிளாஸ்டிக் பாக்கெட்டுகள்,வெட்டப்பட்ட மீன் பிடி வலைகள்,எண்ணெய் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை பவளப் பாறைகளில் படிந்துள்ளதை கண்டறிந்த வனத் துறையினர் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் அப்புறப்படுத்தி கடற் கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுபற்றி வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:- முதல்முறையாக வனத்துறை மூலம் ஸ்கூபா டைவிங் மூலம் நீந்தியபடி கடலுக்கடியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளன. கடலில் உள்ள மீன்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில்,கடல் வளத்தை பாதுகாக்க தயவு செய்து மீனவர்கள் உள்ளிட்ட யாரும் கடல் மற்றும் கடற்கரைபகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை வீச வேண்டாம்.கடல் வளங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story