பட்டாசு திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


பட்டாசு திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sept 2018 4:15 AM IST (Updated: 28 Sept 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி நடைபெறும் பட்டாசு திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மாவட்டத்தில் பிரதான தொழிலாக நடைபெற்று வரும் பட்டாசு தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது. பட்டாசு தயாரிப்புக்கு மூலப்பொருளில் ஒன்றாக தேவைப்படுவது பட்டாசு திரியாகும். இந்த பட்டாசு திரி பட்டாசு ஆலைகளில் பெரும்பாலும் தயாரிக்கப்படுவதில்லை. வெளி நபர்களிடம் இருந்து தான் இதனை பட்டாசு ஆலை நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர்.

பட்டாசு திரி தயாரிப்பு தொழில் வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள பல கிராமங்களில் குடிசை தொழிலாக நடைபெற்று வருகிறது. பட்டாசு திரி தயாரிப்புக்கு எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் கிராமத்து பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழில் ஒப்பந்த அடிப்படையிலும் செய்யப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பட்டாசு திரி தயாரிக்கப்படுவதால் வீடுகளில் இருப்பு வைத்திருக்கும் பட்டாசு திரி எளிதில் தீ பிடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகளும், பெண்களும் பலியாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் இருந்து வந்த ஒரு தனியார் பஸ்சில் இருந்த பட்டாசு திரி பண்டல் தீப்பற்றியதால் பலர் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டது.

முயற்சி

இத்தொழிலை முறைப்படுத்த கடந்த 2010-ம் ஆண்டு சிஜிதாமஸ் வைத்தியன் மாவட்ட கலெக்டராக இருந்த போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பட்டாசு திரி தயாரிப்புக்கு கிராமங்களில் தனியாக தொழில்கூடங்கள் அமைத்து தருவதாகவும், அதில் பட்டாசு திரி தயாரிப்போர் உரிமம் பெற்று பட்டாசு திரி தயாரிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த முயற்சிக்கு பட்டாசு தயாரிப்போர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை. அதன் பின்னரும் பட்டாசு திரி தயாரிப்பு தொழில் எவ்வித அனுமதியும் இல்லாமல் குடிசை தொழிலாக நடந்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கூட குல்லூர் சந்தையில் ஒரு வீட்டில் இருந்த பட்டாசு திரி தீப்பிடித்ததில் 6 வயது சிறுவன் 60 சதவீதம் தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு தயாரிப்புக்கு திரி அதிகமாக தேவைப்படும் பட்சத்தில் திரி தயாரிப்பும் அதிகமாக நடைபெறும் நிலையில் விபத்துகள் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. போலீசார் அவ்வப்போது அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசு திரிகளை வாகனங்களுடன் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த போதிலும் பட்டாசு திரி தயாரிப்பினை கட்டுப்படுத்த முடியவில்லை. அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பதை தயாரிப்பு நிலையிலேயே தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதற்கு மனிதாபிமான அடிப்படையிலான காரணங்கள் கூறப்படுகின்றன.

எனினும் உயிர்ப்பலியை தடுக்கும் வகையில் பட்டாசு திரி தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பட்டாசு திரி தயாரிப்பு அதிகம் நடைபெறும் கிராமங்களில் தொழில் கூடங்கள் அமைத்து பட்டாசு திரி தயாரிப்போருக்கு உரிமம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடு விதித்து அதற்குள் உரிமம் பெறாமல் பட்டாசு திரி தயாரிப்போர் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

Next Story