ஒகேனக்கல்லில் இருந்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்


ஒகேனக்கல்லில் இருந்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 27 Sep 2018 10:45 PM GMT (Updated: 27 Sep 2018 9:29 PM GMT)

ஒகேனக்கல்லில் இருந்து ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பா.ம.க. 30-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இமயவர்மன் வரவேற்றார்.

மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில உழவர் பேரியக்க செயலாளர் வேலுசாமி, முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன், மாவட்ட தலைவர் மதியழகன், மாநில இளைஞர் சங்க துணை தலைவர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

8 வழிசாலை திட்டத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஏற்கனவே சேலம்-சென்னைக்கு 3 வழிசாலைகள் உள்ளன. இதனால் தான் புதியதாக சாலை வேண்டாம் என்கிறோம். ஒகேனக்கல் காவிரிஆற்றில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தபோது அதை சேமிக்க முடியாமல் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

ஒகேனக்கல்லில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீரை குழாய் மூலம் நீரேற்றம் செய்து மடம் பகுதியில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளோம். ஒரு வாரத்தில் 2½ லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். இந்த திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இந்த திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள 10 லட்சம் பேர் பயன் அடைவார்கள். அரூர் முதல் மஞ்சவாடி கணவாய் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும். வாணியாறு இடதுபுற கால்வாயை நீட்டித்து ராமியம்பட்டி வரை கொண்டு செல்ல வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பராமரிக்க வேண்டும். ஆனைமடுவு, பொதியம்பள்ளம் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். மேலும் வள்ளிமதுரை அணைக்கட்டு உயரத்தை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் விஜயன், முத்துசாமி, ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் சபரி லட்சுமணன் நன்றி கூறினார்.

Next Story