ஆரணி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மோதலால் நோயாளிகள் அவதி


ஆரணி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மோதலால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 28 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மோதலால் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள். இதனால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ஆரணி, 


ஆரணி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். மேலும் இந்த மருத்துவமனையில் பிரசவம், குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள், கண் அறுவை சிகிச்சைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

இங்கு தலைமை டாக்டர் உள்பட 15 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் 8 டாக்டர்கள் சுற்றுப்பகுதிகளில் உள்ள சேத்துப்பட்டு, போளூர், கீழ்பென்னாத்தூர், எஸ்.வி.நகரம், தண்டராம்பட்டு, செங்கம், செய்யாறு தலைமை மருத்துவமனை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றுப் பணிக்காக சென்று விடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மயக்கவியல் டாக்டர் ஜெயப்பிரகாஷ் என்பவர் மட்டுமே ஆரணி மருத்துவமனையில் உள்ளார். இவர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளுக்கு பிரசவம், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக சென்று நோயாளிகளுக்கு மயக்க மருந்துகள் கொடுத்து வருகிறார்.
மேலும் மகப்பேறு டாக்டர்கள் 5 பேர் ஆரணி மருத்துவமனையில் இருந்தாலும் ஒருவர் நீண்டநாள் மருத்துவ விடுப்பிலும், ஒருவர் பிரசவக்கால விடுப்பிலும் சென்றுவிட்டதால் மீதமுள்ளவர்கள் மாவட்டத்தில் மருத்துவ முகாம்கள் எங்கு நடந்தாலும் சென்று விடுகின்றனர்.

ஆரணி அரசு மருத்துவமனையில் ஆரணி கொசப்பாளையம் களத்துமேட்டுத் தெருவை சேர்ந்த வேண்டா என்ற பெண்ணிற்கு குடும்ப நல அறுவைசிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டார். மேலும் புங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த உதயசங்கரி, ஆரணி திருவள்ளுவர் நகரை சேர்ந்த திவ்யபாரதி ஆகியோர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கருத்தடை அறுவைசிகிச்சை செய்வதற்காக வேண்டாவுக்கு மயக்கவியல் டாக்டர் மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவர் பிரசவம் பார்ப்பதற்காக வந்த பெண் டாக்டர் சுகந்திபிரியாவிடம் மயக்க மருந்து கொடுத்துள்ள பெண் நோயாளியை முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதில் 2 டாக்டர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக முற்றியது. இருவரும் சண்டை போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மயக்கவியல் டாக்டர் நான் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டேன், இனி சிகிச்சைஅளிப்பது, அளிக்காமல் போவது உங்களுடைய பங்கு என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

இந்தநிலையில் பிரசவம் பார்க்க வந்த 2 பெண் நோயாளிகளையும் பணியில் இருந்த டாக்டர் இளையராஜா அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குடும்பநல அறுவை சிகிச்சை செய்ய வந்த நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்ததால் அவருடைய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து விடுப்பில் இருந்த மருத்துவ அலுவலர் டாக்டர் நந்தினி பணிக்கு திரும்பி வந்து, விவரங்களை கேட்டறிந்து குடும்ப அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிக்கு நாளை செய்வதாக தெரிவித்தார். ஆனால் அவருடைய உறவினர்கள் இன்று மீண்டும் மயக்க மருந்து கொடுக்க வேண்டாம், அடுத்தமாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக தெரிவித்தனர்.

டாக்டர்கள் மோதல் காரணமாக அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதிக்குள்ளானார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story