அந்தியூர் பகுதியில் பலத்த மழை: 40 ஆயிரம் செங்கல் நாசம், மின்னல் தாக்கி செல்போன் கோபுரம் தீப்பிடித்தது


அந்தியூர் பகுதியில் பலத்த மழை: 40 ஆயிரம் செங்கல் நாசம், மின்னல் தாக்கி செல்போன் கோபுரம் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 28 Sept 2018 3:45 AM IST (Updated: 28 Sept 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி, கோபி, அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் செங்கல் சூளையில் காயவைத்திருந்த 40 ஆயிரம் செங்கல் நாசமாகின. மின்னல் தாக்கியதில் செல்போன் கோபுரம் தீப்பிடித்தது.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பஸ்நிலையம் அருகே ஒரு வீட்டின் மாடியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைந்திருந்தது. இந்த கோபுரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதனால் கோபுரத்தில் இருந்த உபகரணங்கள் தீப்பிடித்து எரிந்து கருகின. மழை பெய்ததால் சிறிது நேரத்தில் தீ தானாக அணைந்துவிட்டது.

இந்த சம்பவத்தால் குறிப்பட்ட செல்போன் நிறுவனத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பலத்த மழையால் புஞ்சைபுளியம்பட்டியை சுற்றியுள்ள காவிலிபாளையம், சின்னாங்குட்டை, தேவம்பாளையம் பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பின. அதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இதேபோல் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் சூறாவளிக்காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பொலவக்காளிபாளையத்தில் ஈரோடு-சத்தி ரோட்டில் சாலையோரமாக இருந்த ஒரு புளியமரம் விழுந்தது. நடுரோட்டிலேயே மரம் விழுந்து கிடந்ததால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மற்றும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தலைமையில் போலீசாரும் அங்கு சென்றனர். அதன்பின்னர் மரம் அறுத்து அப்புறப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து வாகனங்கள் சென்றன. கோபி பகுதியில் நேற்று முன்தினம் மழை அளவு 79 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது. இதேபோல் பவானிசாகர், தாளவாடி பகுதியிலும், கடம்பூர் வனப்பகுதியிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனக்குட்டைகளிலும் நீர் நிரம்பியுள்ளது.

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் ஆப்பக்கூடலில் உள்ள செட்டிக்குட்டை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அந்த பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது.

சுக்காநாய்க்கனூர், பழனிநாய்க்கனூர், நல்லாநாய்க்கனூர் பகுதியில் உள்ள சூளைகளில், அறுத்து வெயிலில் காயவைத்திருந்த சுமார் 10 ஆயிரம் செங்கல் நாசமடைந்தன.

அந்தியூர் அடுத்துள்ள சின்னத்தம்பிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் அங்குள்ள கசிவுநீர் குட்டை நிரம்பி உபரிநீர் வெளியேறியது. கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த நகலூர் ஏரியில் நீர் தேங்கியுள்ளது. சின்னதம்பிபாளையம், புதுமேட்டூர், நகலூர், கண்டியானூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சூளைகளில், வெயில் காயவைத்திருந்த சுமார் 30 ஆயிரம் செங்கல் மழையில் நனைந்து சேதமடைந்தன. அத்தாணியில் இருந்து செம்புளிச்சாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள சஞ்சீவிராயன் கோவில் அருகே இருந்த வாய்க்கால் பாலம் சேதம் அடைந்தது. பர்கூர் அருகே உள்ள துருசணாம்பாளையத்தில் வனக்குட்டை நிரம்பி வழிகிறது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் உள்ள போன்பாறை, மல்லியம்மன் கோவில், இரட்டை பாலம், தன்னாசியப்பன் கோவில் ஆகிய இடங்களில் நேற்று திடீரென அருவிபோல் தண்ணீர் கொட்டுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் இந்த காட்சியை ரசித்து செல்போனில் படம் எடுத்தும், செல்பி எடுத்துக்கொண்டும் செல்கிறார்கள்.

குன்றி அருகே உள்ள பெரிய குன்றியை சேர்ந்தவர் சூசையப்பன் (50). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் உள்ள மரத்தில் பரண் அமைத்து காவல் காத்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் காவலுக்கு சென்றார். அப்போது அந்த மரத்தை மின்னல் தாக்கியது. இதனால் பரண் மீது இருந்த சூசையப்பனின் வேட்டியிலும் தீப்பிடித்தது. இதனால் அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அதன்பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

Next Story