மாநில கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது


மாநில கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2018 4:45 AM IST (Updated: 28 Sept 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் மாநில கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

ஆவடி கோவர்த்தனகிரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). சென்னை மாநிலக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஆவடி பஸ்நிலையம் சென்ற முகேசை நேற்று முன்தினம் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

காயம் அடைந்த முகேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து ஆவடி பஸ் நிலைய பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

கைது

அதில் முகேசை அரிவாளால் வெட்டியது, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆவடி சி.ஆர்.பி.எப். குடியிருப்பை சேர்ந்த ரெட் என்ற யோகேஸ்வரன் (21), ஆவடி வீராபுரம் வினோத் நகரை சேர்ந்த மணிகண்டன் (20) உள்பட 3 பேர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் சம்பவத்தன்று ஆவடி பஸ் நிலையத்தில் நின்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஜெபா என்பவரை, முகேஷ் மற்றும் அவருடன் இருந்த மாநிலக்கல்லூரி மாணவர் காமேஷ் (21) உள்ளிட்டவர்கள் அடித்து விரட்டியுள்ளனர். இதுகுறித்து ஜெபா, யோகேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து யோகேஸ்வரன், மணிகண்டன் உள்பட சிலர் அரிவாளுடன் வந்து முகேசை வெட்டியது தெரியவந்தது.

கைதான 3 பேரும் நேற்று இரவு அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஜெபாவை தாக்கிய வழக்கில் காமேசையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story