ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது மிரண்டு ஓடாமல் இருக்க பீரங்கியை வெடிக்கச்செய்து தசரா யானைகளுக்கு பயிற்சி
மைசூருவில், ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது மிரண்டு ஓடாமல் இருக்க பீரங்கியை வெடிக்கச்செய்து தசரா யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மைசூரு,
மைசூருவில், ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது மிரண்டு ஓடாமல் இருக்க பீரங்கியை வெடிக்கச்செய்து தசரா யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தசரா விழா
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தசரா விழாவையொட்டி மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டதுபோல் உள்ளது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கும்.
750 கிலோ எடை கொண்ட சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை யானைகள் புடைசூழ அர்ஜூனா யானை சுமந்து கொண்டு கம்பீர நடைபோட்டு செல்லும். அப்போது யானைகளுக்கு முன்பு ஏராளமான நடன கலைஞர்கள் மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி செல்வார்கள். யானைகளைத் தொடர்ந்து கன்னட கலாசாரத்தை எடுத்துக்கூறும் வகையில் ஏராளமான அலங்கார வண்டிகள் அணிவகுத்து செல்லும். அதுமட்டுமல்லாமல் வாணவேடிக்கைகள், பீரங்கி முழக்கங்கள் என ஜம்புசவாரி ஊர்வலமே அமர்க்களமாக இருக்கும். அதைக்காண கர்நாடகத்தில் இருந்து மட்டுமல்லாமல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள்.
ஜம்புசவாரி ஊர்வலம்
இப்படி பல்வேறு சிறப்புமிக்க ஜம்புசவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை உள்பட 12 யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. அவைகளுக்கு நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நேற்று அவைகளுக்கு முதல் கட்டமாக மைசூரு அரண்மனை கோட்டை மாரியம்மன் கோவில் அருகே வைத்து பீரங்கியை வெடிக்கச்செய்து பயிற்சி அளிக்கப்பட்டன.
அதாவது ஜம்புசவாரி ஊர்வலத்தின்போது பீரங்கிகளில் குண்டுகள் வைத்து வெடிக்கச்செய்வது வழக்கம். அந்த சந்தர்ப்பங்களில் யானைகள் மிரளாமல் இருப்பதற்காக முன்னதாகவே தசரா யானைகளுக்கு, பீரங்கியை வெடிக்கச்செய்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அதுபோன்ற பயிற்சிதான் நேற்று தசரா யானைகளுக்கு அளிக்கப்பட்டது.
3 யானைகள் மிரண்டன
இதில் ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் 12 யானைகளும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டன. பின்னர் அவற்றின் முன்பு பீரங்கியை வெடிக்கச்செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு 4 முறை பீரங்கியை வெடிக்கச்செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக யானைகளை நிற்க வைத்த இடத்திற்கும், பீரங்கி வைக்கப்பட்ட இடத்திற்கு உண்டான இடைவெளியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் யானைகள் அனைத்தும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன.
பீரங்கியை வெடிக்கச்செய்தபோது துரோனா, தனஞ்செயா, சைத்திரா ஆகிய 3 யானைகளும் மிரண்டன. அவைகள் பீரங்கியை நோக்கி நிற்காமல் திரும்பி நின்றுகொண்டன. கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் அவைகள் ஓடவில்லை. இல்லையென்றால் ஓடியிருக்கும் என்று பாகன்கள் தெரிவித்தனர். பீரங்கியை வெடிக்கச்செய்த பிறகு அதன் புகை மற்றும் நெடியை உணர்வதற்காக யானைகளை சுற்றி பீரங்கி கொண்டு செல்லப்பட்டது.
இன்னும் 4 நாட்களுக்கு பிறகு...
இதேபோன்று ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் குதிரைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இது முதல்கட்ட பயிற்சிதான். இன்னும் 4 நாட்களுக்கு பிறகு இதேபோல் மீண்டும் 2-வது கட்டமாக யானைகளுக்கும், குதிரைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story