தாயின் சாவில் மர்மம் இருப்பதாக மகன் வழக்கு: சென்னை பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


தாயின் சாவில் மர்மம் இருப்பதாக மகன் வழக்கு: சென்னை பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 28 Sept 2018 5:00 AM IST (Updated: 28 Sept 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

தாயின் சாவில் மர்மம் இருப்பதாக மகன் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அவரது தாயின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

பெரம்பூர், 

சென்னை பெரம்பூர் ராஜாபாதர் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மனைவி லலிதா (வயது 64). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர். மகன் பாபு (41) அமெரிக்காவில் வேலை செய்து வந்தார்.

அமிர்தலிங்கம் தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் லலிதா மட்டும் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் பாபுவுக்கும், வளசரவாக்கத்தை சேர்ந்த நந்தினி (34) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு இருவரும் அமெரிக்கா சென்றுவிட்டனர்.

அதன்பிறகு தனது தாய் லலிதாவை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் தனது மனைவி நந்தினியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாபு சென்னைக்கு அனுப்பிவைத்தார்.

தாய் சாவு

கடந்த பிப்ரவரி மாதம் தீராத வயிற்றுப்போக்கு காரணமாக லலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக பாபுவுக்கு தகவல் தெரிவித்தனர். தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார்.

தாய் லலிதாவின் உடல் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தாய் இறந்த பிறகு பாபு, அமெரிக்கா செல்லாமல் சென்னையிலேயே தனது மனைவியுடன் தங்கிவிட்டார்.

இதற்கிடையில் பாபுவுக்கும், அவரது தாயார் லலிதாவுக்கு ஏற்பட்டது போல் தீராத வயிற்று போக்கு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது தற்செயலாக தனது மனைவி நந்தினியின் செல்போனை வாங்கி பார்த்தார்.

சாவில் மர்மம்

அதில் நந்தினி, வளசரவாக்கத்தில் உள்ள தனது அக்காவுடன் பேசிய உரையாடல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதை கேட்ட பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் நந்தினி, அவரது அக்கா இருவரும் லலிதாவுக்கு செய்ததுபோலவே பாபுவுக்கும் ஏதேனும் மாந்திரீகம் செய்யவேண்டும் என்ற தோணியில் பேசி இருந்ததாக தெரிகிறது.

இதனால் தனது தாய் லலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக கருதிய பாபு இதுபற்றி செம்பியம் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் கொடுத்தார். அப்போது தனது மனைவி, அவரது அக்காவுடன் பேசிய ஆடியோ உரையாடலையும் போலீசாரிடம் கொடுத்தார். அதை கேட்ட போலீசார், இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

உடல் தோண்டி எடுப்பு

இதற்கிடையில் பாபு, தனது தாயின் சாவில் மர்மம் இருப்பதால் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தவேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, லலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பும்படி தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று காலை பெரம்பூர் தாசில்தார் சைலேந்தர், செம்பியம் உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பெரம்பூர் மயானத்தில் புதைக்கப்பட்ட லலிதாவின் உடல் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.

அதே இடத்தில் வைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர் சிவக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் சில உடற்கூறுகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மீண்டும் அவரது உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கை வந்தபிறகே லலிதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story