பயிர்க் காப்பீட்டு தொகையை முறையாக வழங்கவில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு


பயிர்க் காப்பீட்டு தொகையை முறையாக வழங்கவில்லை : விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Sept 2018 3:15 AM IST (Updated: 28 Sept 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க் காப்பீட்டு தொகை முறையாக வழங்கவில்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அப்போது பழனி, தொப்பம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர் களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை முறையாக வழங்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். பிரீமியத்தொகை ரூ.3 ஆயிரம் செலுத்தியவர்களுக்கு ரூ.400 தான் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

மேலும் அதிகாரிகளின் இருக்கைக்கே சென்றும் முறையிட்டனர். இதையடுத்து பயிர்க் காப்பீட்டு தொகையை முறையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி அளித்தார். அதன்பேரில் விவசாயிகள் தங்களுடைய இருக்கைக்கு சென்றனர்.

இதற்கிடையே ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மயில்கள் கொத்தியதில் சேதமான பூசணிக்காய்களை காண்பித்து பேசினார். அப்போது மயில்கள் அதிக அளவில் பெருகி விட்டன. பூசணிக் காய், மக்காச்சோளம் உள்பட அனைத்து பயிர்களையும் சேதம் செய்கின்றன. தேசியப்பறவை என்பதால் அதை துரத்துவதற்கு கூட பயமாக உள்ளது.

எனவே, மயில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதேபோல் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வெரியப்பூரில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று ஒருவர் மனுக்களை மாலையாக அணிந்து வந்தார்.

மேலும் திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, காவிரியில் இருந்து நத்தத்துக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வர வேண்டும். அரசு சார்பில் ஆறுகள், ஓடைகளில் தடுப்பணைகளை அதிகமாக கட்ட வேண்டும். மழை காலத்தில் அவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நிலக்கோட்டை குல்லிசெட்டிபட்டியில் 11-ம் கால்வாய் சேதம் அடைந்து விட்டது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே, 10-வது கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். திண்டுக்கல் பள்ளப்பட்டி மூங்கில்குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலத்தில் கழிவுநீர் பொன்மாந்துறை வழியாக குடகனாற்றில் கலக்கும் அபாயம் உள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், வனவிலங்குகளால் பயிர்கள் சேதமானால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகள் விளை நிலங் களுக்குள் வருவதை தடுக்க வேண்டும், என்றார். 

Next Story