கல்லூரியில் இடம் கிடைக்காததால் அமைச்சரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்


கல்லூரியில் இடம் கிடைக்காததால் அமைச்சரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2018 4:06 AM IST (Updated: 28 Sept 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கல்லூரியில் இடம் கிடைக்காததால் சட்டசபை வளாகத்தில் கல்வித்துறை அமைச்சரை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் ‘சென்டாக்’ கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான ஒட்டு மொத்த(மாப்-அப்) கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.

இறுதி நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்டாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் புதுவை சட்டசபை எதிரே உள்ள பாரதிபூங்காவில் தங்கள் பெற்றோருடன் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.வை சந்தித்து முறையிட்டனர். உடனே அவர்களை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனை சந்திக்க அழைத்துச்சென்றார்.

அங்கு அவர்கள் கல்வித்துறை அமைச்சரை முற்றுகையிட்டு தங்களுக்கு இடம் கிடைக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ஒரு மாணவி அமைச்சரின் காலில் விழுந்து எப்படியாவது இடம் வேண்டும் என்று கதறி அழுதார். சகமாணவிகள் அவரை சமாதானப்படுத்தினர்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், கல்லூரியில் இடங்களை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை உடனடியாக அதிகரித்து விட முடியாது. புதுவை பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். இன்னும் 2 நாட்கள் காத்திருங்கள். என்றார். அப்போது மாணவர்கள் 30-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என்றனர். உடனே அமைச்சர் கமலக்கண்ணன் அவர்களிடம், இது தொடர்பாக உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story