காய்கறி கடையில் ரூ.5 ஆயிரம், கோழி முட்டைகள் திருட்டு
விருத்தாசலத்தில் காய்கறி கடையில் ரூ.5 ஆயிரம் மற்றும் கோழிமுட்டைகள் திருடுபோனது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன்(வயது 43). இவர், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ரெயில்வே பஸ் நிறுத்தம் எதிரில் காய்கறி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கண்ணன், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலையில் வந்து கடையை திறந்து பார்த்தபோது, காய்கறிகள் சிதறிக்கிடந்தன. கடையின் ஒரு பகுதியில் அடைத்து வைத்திருந்த கீற்றுகள் பிரிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தார். அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 50 நாட்டுக்கோழி முட்டைகளும் இல்லை. நள்ளிரவில் கடையின் கீற்றை பிரித்துக்கொண்டு மர்மநபர்கள் உள்ளே நுழைந்து பணம் மற்றும் கோழிமுட்டையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து கண்ணன், விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். காய்கறி கடையில் திருடிய மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story