தேசிய அளவில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர்,
ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகள், 2 சிறந்த பயிற்றுனர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசு வீதம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்க பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை வழங்கி வருகிறது.
இது தவிர விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம், மற்றும் நன்கொடையாளர், ஆட்ட நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பெண்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின்படி 2013-14, 2014-15, 2015-16, 2016-17 ஆகிய நிதி ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள், முந்தைய 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும் அதாவது உலககோப்பை, தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டு போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்களிலும் மற்றும் குழு போட்டிகளில் முதல் மற்றும் 2-வது இடமும் பெற்றிருக்க வேண்டும். ஒரு விருதுக்கு 3-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அதே வருடத்தில் அனுப்ப கூடாது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப உறை மேல் முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, நேருபார்க், சென்னை-84 என்ற முகவரிக்கு வருகிற 10-ந் தேதிக்குள் வந்து சேர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தகுதியாக உள்ளநபர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story