கால்வாய் உடைந்து புனே நகரில் திடீர் வெள்ளம் சாலைகள், குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பரபரப்பு
புனேயில் கால்வாய் கரை உடைந்து நகரில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
மும்பை,
புனேயில் கால்வாய் கரை உடைந்து நகரில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
கால்வாய் உடைந்தது
புனே புறநகர் பகுதியில் கடக்வாஸ்லா அணை உள்ளது. பருவமழையின் போது, அந்த அணை நிரம்பியது. தற்போது, இந்தாப்பூர் மற்றும் டாவுன்ட் தாலுகாக்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள முக்தா கால்வாயில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தநிலையில், நேற்று காலை 11 மணியளவில் முக்தா கால்வாய் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சுமார் 15 மீட்டர் தூரத்துக்கு கரை உடைந்தது.
இதன் காரணமாக கால்வாயில் இருந்து தண்ணீர் புனே நகருக்குள் பெருக்கெடுத்தது. முக்தா கால்வாயை ஒட்டி உள்ள ஜனதா வசாகாட், தாண்டேகர் பாலம், சின்ஹகாட் சாலை உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
சாலைகளில் வெள்ளம்
மேலும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்தது. கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. ஏராளமான வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. திடீரென தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமும், பீதியும் அடைந்தனர். வீடுகளில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
சின்ஹகாட்டில் உள்ள முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக அந்த சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.
மக்கள் வெளியேற்றம்
நகரில் புகுந்த திடீர் வெள்ளம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கடக்வாஸ்லா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. நீர்பாசனத்துறை அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்தனர். போர்க்கால அடிப்படையில் உடைந்த கால்வாய் கரையை சரி செய்யும் பணிகள் நடந்தன.
மேலும் வெள்ளம் புகுந்த குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Related Tags :
Next Story