போலி நெய் தயாரித்த வீடு, குடோனுக்கு ‘சீல்’ வைப்பு


போலி நெய் தயாரித்த வீடு, குடோனுக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 28 Sept 2018 3:30 AM IST (Updated: 28 Sept 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் போலி நெய் தயாரித்த வீடு, குடோனுக்கு ‘சீல்’ வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்,


சேலம் பொன்னம்மாபேட்டை 2-வது புதுதெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலி நெய் தயாரித்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை அந்த வீட்டிற்கு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் போலி நெய் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, டால்டா, பாமாயில் மற்றும் கெமிக்கலை பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக போலி நெய்யை தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 75 கிலோ போலி நெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்து 43 கிலோ நெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த வீட்டிற்கு ‘சீல்‘ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், நேற்று முன்தினம் அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த குடோனில் இருந்து 50 கிலோ போலி நெய் மற்றும் லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த குடோனுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.

இதுகுறித்து நியமன அலுவலர் மாரியப்பன் கூறும் போது, மாவட்டத்தில் போலி நெய் தயாரித்து விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறோம். மொத்தம் 160 கிலோ போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி நெய்யை தயாரித்து விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

சேலம் சூரமங்கலம் தர்மன்நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா விற்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று இரவு அந்த வீட்டுக்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் குட்கா வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story