வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை கற்பழித்த வாலிபர் கைது 15 பாலியல் வழக்குகளில் தொடர்புடையவர்
நவிமும்பை, தானேயில் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
நவிமும்பை, தானேயில் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமிகள் கற்பழிப்பு
நவிமும்பை, தானே மற்றும் பால்கரில் மர்ம வாலிபர் ஒருவர் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை தந்தை அழைப்பதாக ஏமாற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கடத்திச்சென்று கற்பழித்து வந்தார். கற்பழிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் 13 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
மர்ம வாலிபர் மீது நவிமும்பை, தானே மற்றும் பால்கரில் உள்ள போலீஸ் நிலையங்களில் கற்பழிப்பு, மானபங்க வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமிகளை கற்பழித்து வந்த மர்மநபரால் பொதுமக்கள் இடையே பீதி கிளம்பியது.
நவிமும்பை குற்றப்பிரிவு போலீசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த வாலிபரை வலைவீசி தேடிவந்தனர்.
வாலிபர் கைது
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மிராரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுமிகளை கற்பழித்து வந்த வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த படத்தை வைத்து போலீசார் மிராரோடு நயாநகர் பகுதியில் வைத்து சம்பந்தப்பட்ட வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் ரெகான் குரேஷி(வயது30) என்பது தெரியவந்தது.
இது குறித்து நவிமும்பை துணை போலீஸ் கமிஷனர் துஷார் ஜோஷி கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட ரெகான் குரேஷி மீது கற்பழிப்பு, மானபங்கம் என 15 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மேலும் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பார் என சந்தேகப்படுகிறோம். எனவே அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story