அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
பாதிவழியில் தம்பதியை இறக்கி விட்டதால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கஸ்தூரிபாய். இவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் தீவட்டிப்பட்டியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் அரசு பஸ்சில் ஏறினர். பின்னர் முருகேசன் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி ஸ்டேஜிற்கு நடத்துனர் குமார் என்பவரிடம் டிக்கெட் கேட்டார். ஆனால் நடத்துனர் குமார் பெங்களூருவுக்கு டிக்கெட் வழங்கினார்.
இதையடுத்து முருகேசன் டிக்கெட்டை எலக்ட்ரானிக்ஸ் சிட்டி ஸ்டேஜிற்கு மாற்றி தரும்படி கேட்டார். நடத்துனர் டிக்கெட் பெற்றுக்கொண்டு, தர்மபுரிக்கான டிக்கெட்டை வழங்கி விட்டு இருவரையும் தர்மபுரியிலேயே இறக்கி விட்டு சென்றார். இதுகுறித்து முருகேசன் சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து பொதுமேலாளரிடம் புகார் கொடுத்தபோது சரியான பதில் கூறவில்லை.
இதைத்தொடர்ந்து முருகேசன் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் புலனாய்வு சேர்மன் வக்கீல் செல்வம் மூலம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர், நடத்துனர் குமார் ஆகியோர் மீது சேலம் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறியதால் சேவை குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை முடித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில், மனுதாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலிற்கு நஷ்ட ஈடாக ரூ.3 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதமாக வழங்க வேண்டும் எனவும், 3 மாதத்திற்குள் 3 பேரும் தனித்தனியாக அல்லது கூட்டாக வழங்கிட வேண்டும் எனவும், செலுத்த தவறினால் 9 சதவீத வட்டியும் சேர்த்து வழங்கிட வேண்டும் எனவும் நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story