பம்மல், அனகாபுத்தூர் நகராட்சியில் கல்குவாரி நீரை சுத்திகரித்து வழங்க ரூ.6½ கோடியில் புதிய திட்டம்


பம்மல், அனகாபுத்தூர் நகராட்சியில்  கல்குவாரி நீரை சுத்திகரித்து வழங்க ரூ.6½ கோடியில் புதிய திட்டம்
x
தினத்தந்தி 28 Sept 2018 4:57 AM IST (Updated: 28 Sept 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

பம்மல், அனகாபுத்தூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கல்குவாரி நீரை சுத்திகரித்து வழங்க ரூ.6 கோடியே 40 லட்சத்தில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தாம்பரம், 

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சிகளில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த 2 நகராட்சிகளிலும் குடிநீர் பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

பம்மலுக்கு தினமும் 68 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், 35 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. அனகாபுத்தூருக்கு தினமும் 43 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 25 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே.

சென்னை குடிநீர் வாரியம், உள்ளூர் நீர் ஆதாரங்கள் உள்ளிட்டவைகள் மூலம் பெறப்படும் தண்ணீர் இங்குள்ள மக்களுக்கு வாரத்துக்கு ஒருநாள் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது.

கோடைகாலத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அந்த சமயத்தில் நிலத்தடி நீர் வற்றிவிடுவதால் லாரிகளில் வினியோகிக்கப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

செம்பரம்பாக்கம் குடிநீர்

குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த பம்மல் நகராட்சிக்கு ரூ.43 கோடியே 10 லட்சத்திலும், அனகாபுத்தூர் நகராட்சிக்கு ரூ.14 கோடியே 87 லட்சத்திலும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டம் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் இந்த நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற ஜனவரி மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல் குவாரிகளில் இருந்து...

இதற்கிடையில் பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி பகுதியில் தற்போதுள்ள குடிநீர் பிரச்சினையை போக்க கல்குவாரி நீரை சுத்திகரித்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அனகாபுத்தூர் அருகே செங்கழுநீர் மலைப்பகுதியில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள 568 மில்லியன் லிட்டர் நீரை 227 நாட்களுக்கு மிதவை இரைப்பான் மூலம் எடுத்து சுத்திகரிப்பு செய்து பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கல்குவாரியில் இருந்து நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து, அதில் பம்மல் நகராட்சி பகுதிக்கு தினமும் 15 லட்சம் லிட்டரும், அனகாபுத்தூர் நகராட்சிக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடியே 40 லட்சத்தில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை செய்ய மும்பை நாக்பூரைச்சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரூ.6½ கோடியில் புதிய திட்டம்

அனகாபுத்தூர் அருகே உள்ள செங்கழுநீர் மலைப்பகுதியில் உள்ள கல் குவாரியில் இருந்து தண்ணீரை எடுத்து, சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு வினியோகிக்க ரூ.6 கோடியே 40 லட்சத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில் 2 நிறுவனங்கள் பங்கேற்றன. 2 நிறுவனங்களும் இந்த குடிநீர் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப்படவுள்ளன என்பது குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வு அறிக்கையின் முடிவுக்கு பிறகு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டு தற்போது மும்பை நாக்பூரைச்சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் பணி தொடக்கம்

இந்த பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பம்மல் நகராட்சிக்கு தினமும் 15 லட்சம் லிட்டரும், அனகாபுத்தூர் நகராட்சிக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கும்.

பம்மல் நகராட்சி பகுதிக்கு சங்கர் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் எச்.எல். காலனி பகுதியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய இடங்களுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு இங்கிருந்து நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெற உள்ளது.

இதேபோல் அனகாபுத்தூர் நகராட்சிக்கு சுடுகாடு அருகில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story