தனுஷ்கோடி கடற்கரையில் அரிய வகை கடல் பன்றி இறந்து கரை ஒதுங்கியது
தனுஷ்கோடி கடற்கரையில் 200 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பன்றி இறந்து கரை ஒதுங்கியது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின், கடல்பசு, கடல் பன்றி, ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பன்றி ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கி கிடந்த கடல் பன்றியை பார்வையிட்டனர். அது சுமார் 4 அடி நீளமும் 200 கிலோ எடையும் இருந்தது. கால் நடை டாக்டர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்த பின்பு கடற்கரையிலேயே புதைத்தனர்.
தனுஷ்கோடி கடற்கரையில் பல முறை டால்பின், ஆமைஆகியவை இறந்து கரை ஒதுங்கியுள்ளன. எனினும் 3 வருடத்திற்கு பிறகு கடல் பன்றி ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. கடலில் நீந்தும் போது கப்பலில் அடிபட்டு நீந்த முடியாமல் கரை ஒதுங்கியிருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்தனர். கரை ஒதுங்கி கிடந்த கடல் பன்றியை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.