சாலையில் தவற விட்ட கைப்பையை தம்பதியிடம் ஒப்படைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்


சாலையில் தவற விட்ட கைப்பையை தம்பதியிடம் ஒப்படைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 29 Sept 2018 3:00 AM IST (Updated: 28 Sept 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியில் சாலையில் தவறவிட்ட நகை, பணம் இருந்த கைப் பையை தம்பதியிடம் ஒப்படைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.

உப்புக்கோட்டை, 


தேனி அருகே வீரபாண்டியில், பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தனது மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் கைப்பை ஒன்று கிடப்பதை பார்த்தார்.

இதையடுத்து அந்த கைப்பையை எடுத்து திறந்து பார்த்தபோது, ரூ.9 ஆயிரத்து 750 மற்றும் ஒரு பவுன் நகை, 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இதுதவிர ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய எண்ணும் துண்டுச்சீட்டில் எழுதப் பட்டிருந்தது. ஆனால் அந்த கைப்பை யாருடையது என்பது முதலில் தெரிய வில்லை. இதையடுத்து அந்த ஏ.டி.எம்.கார்டுகளில் செந்தில்குமார், இந்திரா என்று பெயர்கள் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதையடுத்து அந்த ஏ.டி.எம். கொடுக் கப்பட்டுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அசோக் முகவரியை விசாரித்தார். அப்போது அந்த ஏ.டி.எம்.கார்டுகள், சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி மேலத்தெருவை சேர்ந்த செந்தில்குமார், அவருடைய மனைவி இந்திரா ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் நேற்று போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் கூறிய தகவல் சரியாக இருந்ததை தொடர்ந்து நகை, பணம் இருந்த கைப்பையை சப்-இன்ஸ்பெக்டர் அசோக் ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில் ‘நான் சீலையம்பட்டியில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாய செலவுக்காக நகையை அடகு வைக்க தனது மனைவியுடன் தேனிக்கு சென்றேன். போகும் வழியில் எனது மனைவியிடம் இருந்த கைப்பை தவறியது. இதனால் கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்தோம். கைப்பையை ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறோம்’ என்றார்.

லஞ்சம் வாங்கும் ஒரு சில போலீஸ்காரர்கள் மத்தியில் நகை, பணம் உள்ள கைப்பையை தேடி அலைந்து உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பாராட்டினர். 

Next Story