கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2018 3:15 AM IST (Updated: 28 Sept 2018 10:50 PM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பலூரில் அரசு உறுப்பு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உறுப்பு கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பில் நேற்று குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் கிளையின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நீலவேணி, பொருளாளர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில்குமார், 10 அம்ச கோரிக்கைகளை விரிவாக எடுத்து கூறி பேசினார்.

முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 1.6.2018 அன்று 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அந்த அரசு ஆணையை விரைவாக வெளியிட்டு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியை அரசு கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை தகுதி அடிப்படையில் சிறப்பு தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட உள்ள நிலையில், அதில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த தகுதியான கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வில் அரசு இணைத்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி ஆசிரியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். மற்றும் மகளிர் பேறுகால விடுப்பு போன்ற நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பெரம்பலூர் கிளையின் துணைத் தலைவர் அரங்கவளவன் வரவேற்றார். முடிவில் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

Next Story