காய்ந்த கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகில் காய்ந்த கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சின்னப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஜோதிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த 2017-18-ம் ஆண்டில் வறட்சியால் காய்ந்த கரும்புகளை உடனே கணக்கெடுப்பு நடத்த வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து காய்ந்த கரும்புகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் அனைவரும் காய்ந்த கரும்புகளுடன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், குண்டுரெட்டியார், தண்டபாணி, தமிழரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் விவசாயிகள் அனைவரும் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story