தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழா நடத்த தடை கிடையாது கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழா நடத்த தடை கிடையாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழா நடத்த தடை கிடையாது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். அவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இறந்த 2 பேரின் வாரிசுகள் 18 வயதுக்கு உட்பட்டவராக உள்ளனர். அவர்கள் தகுதி பெற்றதும் வேலை வழங்கப்படும். ஒருவர் வேலை வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனால் மீதம் உள்ள 10 பேருக்கு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த 9 பேருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது.
இதில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள், படிக்காதவர்களும் உள்ளனர். அவர்களுக்கு தலையாரி, காவலாளி, சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிகள் வழங்கப்பட்டு உள்ளன. தலையாரி பணியில் சேருபவர்களுக்கு தாசில்தார் வரை பதவி உயர்வு பெறும் வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு ஏதேனும் உதவி வேண்டுமென்றாலும், செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.
தடை கிடையாது
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு பல லட்சம் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
தாமிரபரணி புஷ்கர விழா தூத்துக்குடி மாவட்டத்தில் 6 இடங்களில் நடக்கிறது. அந்த பகுதிகளில் தெருவிளக்கு வசதி, கழிப்பிட வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். புஷ்கர விழா நடத்துவதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித தடையும் கிடையாது. ஆனால் விழா நடைபெறுவது வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் ஆகும். அதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story