தூத்துக்குடி மாவட்டத்தில் 500 மருந்து கடைகள் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 500 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 500 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
கடையடைப்பு
இணையதளம் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதால், நாடு முழுவதும் உள்ள சுமார் 7 லட்சம் மருந்து வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே போன்று தடை செய்யப்பட்ட மருந்துகள் சமூகவிரோதிகளிடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால் இணையதள மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய மருந்து வணிகர் சங்கம், மாநில மருந்து வணிகர் சங்கம் இணைந்து கடையடைப்பு போராட்டம் அறிவித்தது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
500 கடைகள்
தூத்துக்குடியில் பெரும்பாலான மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நோயாளிகள் மருந்துகள் வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
அதே நேரத்தில் நோயாளிகள் தாங்கள் சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரிகளில் உள்ள மருந்து கடைகளிலேயே மருந்துகளை வாங்கி சென்றனர்.
இதேபோல் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, கழுகுமலை, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 120 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 500 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து கோவில்பட்டியில், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜான்பிரிட்டோ கூறுகையில், ‘ஆன்லைன் மருந்து வணிகத்தால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையிலும், மத்திய அரசு இதனை தடை செய்ய கோரியும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 500 கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்‘ என்றார்.
Related Tags :
Next Story