அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி: ‘சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்’


அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி: ‘சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்’
x
தினத்தந்தி 29 Sept 2018 3:30 AM IST (Updated: 29 Sept 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

ஆண்டிப்பட்டி,


ஆண்டிப்பட்டி நகரில் அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்த, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆண்களுக்கு பெண்கள் சமம் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பாக கொடுத்திருக்கிறது. பொதுவாக எந்த கோவிலுக்கு பெண்கள் வந்தாலும் சுத்தமாக தான் வருகிறார்கள். அதுபோல அய்யப்பன் கோவிலுக்கும் சுத்தமாக தான் வருவார்கள். பயபக்தியுடன் அய்யப்பனை வணங்கும் பெண்கள் சபரிமலைக்கு வருவார்கள்.

கேள்வி:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அந்த விழாவில் அவர் கலந்து கொள்வாரா?

பதில்:- அ.தி.மு.க. கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கான அழைப்பிதழில் டி.டி.வி.தினகரன் பெயர் இடம் பெற்றுள்ளது எங்களுக்கு பெரிய வெற்றியாகும். ஆனால் அந்த விழாவில் டி.டி.வி.தினகரன் கலந்து கொள்வாரா? என்பது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும்.

கேள்வி:- தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பே இல்லாமல் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உள்ளாட்சி தேர்தல் என்பதையே மறந்து விட்டனர் போல இருக்கிறதே?

பதில்:- பொதுவாக தேர்தல் என்றாலே அ.தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்றம், கூட்டுறவு சங்கம் மற்றும் இடைத்தேர்தலை நடத்த அ.தி.மு.க.வுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தேர்தல் நடத்தினால் நிச்சயம் அ.தி.மு.க. தோற்கும். இதனை புரிந்து கொண்டுதான் தேர்தலை நடத்த தயங்குகின்றனர். எங்கள் 18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதன்மூலம் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் போய் சேரும்.

கேள்வி- ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு உதவியதாக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது குறித்து?

பதில்:- இந்தியாவிலேயே ஆளும் அரசு, எதிர்க்கட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது இதுவே முதல்முறை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்த நாளில், இலங்கையில் வீரவணக்கம் செலுத்தும் கூட்டம் நடந்தது. அப்போது, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே கலந்து கொண்டு ரெக்கார்டு நோட்டில் எழுதினார். என்ன எழுதினார் என்றால், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எங்களுக்கு ராணுவ தளவாடங்கள் கொடுத்த காரணத்தால் தான் நாங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க முடிந்தது என்று எழுதினார். அ.தி.மு.க. அரசு, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை கண்டிக்கும்போது, பா.ஜ.க.வையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ஏன் என்றால் அ.தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க.வை கண்டு பயம். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பதில் கூறினார். 

Next Story