மகா புஷ்கர விழா கோவில்கள், தாமிரபரணி ஆற்றில் அழைப்பிதழை வைத்து வழிபாடு


மகா புஷ்கர விழா கோவில்கள், தாமிரபரணி ஆற்றில் அழைப்பிதழை வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 28 Sep 2018 10:00 PM GMT (Updated: 28 Sep 2018 7:12 PM GMT)

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி கோவில்கள் மற்றும் ஆற்றில் அழைப்பிதழை வைத்து நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நெல்லை, 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி கோவில்கள் மற்றும் ஆற்றில் அழைப்பிதழை வைத்து நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மகா புஷ்கர விழா

தாமிரபரணி ஆற்றுக்கு மகா புஷ்கர விழா வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்புகள் சார்பில் மகா புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

துறவிகள் சார்பில் மகா புஷ்கர விழாவுடன் மகா சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த விழா, மாநாட்டுக்கான அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு உள்ளது. அந்த விழா பத்திரிகை நேற்று பாபநாசம் கோவில், நெல்லையப்பர் கோவிலில் சுவாமி, அம்பாள் முன்னிலையில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தாமிரபரணியில் பூஜை

மேலும் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம் முன்பு தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது அழைப்பிதழை வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஆற்றில் மலர் தூவி ஆரத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் விழா அழைப்பிதழ் மீது தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து ஆற்றில் விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனமும் அகில பாரத துறவிகள் சங்க தலைவருமான சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், செயலாளர் ராமானந்தா சுவாமி, பெரம்பலூர் பிரம்மரிஷி மலை சித்தர் சாமி, பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கூறியதாவது:- 12 ராசிகளுக்கு ஏற்ப 12 நதிகளில் குருபெயர்ச்சியையொட்டி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. அதில் தமிழகத்தில் 2 நதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மயிலாடுதுறை ஆற்றில் காவிரி புஷ்கர விழா விழா கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு பொதிகை மலையில் உற்பத்தியாகி வங்க கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனம், மடாதிபதிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவுக்கு மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையினர் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story