குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பொறியியல் துறை ஊழியர்கள் தர்ணா
குன்னூர் அருகே வெலிங்டனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணுவ பொறியியல் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்,
இந்திய ராணுவத்தில் எம்.இ.எஸ். என்று அழைக்கப்படும் மிலிட்டரி என்ஜினீயரிங் சர்வீஸ் என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவினர் கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட சிவில் என்ஜினீயரிங் பணிகளை மேற்கொள்கின்றனர். குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் எம்.இ.எஸ். நிர்வாகம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.இ.எஸ். தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
எம்.இ.எஸ். நிர்வாகத்தில் கடந்த 2003–ம் ஆண்டுக்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இதனை புதிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் அறிவித்துள்ளனர். எனவே அதனை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழு பரிந்துரையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே அதனை மறுபரிசீலனை செய்து குறைபாடுகளை நீக்க வேண்டும். எம்.இ.எஸ். நிர்வாகத்தில் காலிபணியிடங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக நிர்வாகத்தில் உள்ள 12 வாகனங்களுக்கு 2 டிரைவர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை கூடி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். எம்.இ.எஸ். ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சங்க செயலாளர் விமல், நிர்வாகிகள் பிரகாஷ், திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.