சங்கரன்கோவில் அருகே மூடப்பட்டிருந்த கல்குவாரியை இயக்க முயன்ற உரிமையாளருக்கு அடி-உதை
சங்கரன்கோவில் அருகே மூடப்பட்டிருந்த கல்குவாரியை நீதிமன்ற உத்தரவு பெற்று இயக்க முயன்ற உரிமையாளரை 25 பேர் கொண்ட கும்பல் அடித்து, உதைத்தனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே மூடப்பட்டிருந்த கல்குவாரியை நீதிமன்ற உத்தரவு பெற்று இயக்க முயன்ற உரிமையாளரை 25 பேர் கொண்ட கும்பல் அடித்து, உதைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
போராட்டம்
சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் பகுதியில் பல கல்குவாரிகள் இயங்கி வருகின்றது. இதனால் தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் பல போராட்டங்களை நடத்தினர். இதனால் வருவாய்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்குவாரிகளை இயங்காமல் நிறுத்தி வைத்தனர்.
கல்குவாரி உரிமையாளர்
இந்நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்த குருசாமி மகன் இன்பராஜா (வயது 58). இவர் ஆனையூர் பகுதியில் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். வருவாய்துறையினர் விதித்த தடையை நீக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்து கல்குவாரியை இயக்க உத்தரவு பெற்றதாக கூறப்படுகிறது. இதன்பேரில் அவர் நேற்று முன்தினம் காலையில் கல்குவாரியை இயக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த 25 பேர் அந்த கல்குவாரிக்குள் நுழைந்து அவரிடம் தகராறு செய்தனர்.
அடி, உதை
அதற்கு இன்பராஜா தான் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருப்பதாக தெரிவித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கும்பல் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளது. தகவல் கிடைத்தவுடன் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று, பலத்த காயங்களுடன் அவரை மீட்டனர். பின்னர் அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story