சென்னையில் தேசிய அளவிலான சித்த மருத்துவ மாநாடு மத்திய மந்திரி ஸ்ரீபாத்யெசோ நாயக் தொடங்கிவைத்தார்
சென்னையில் தேசிய அளவிலான சித்த மருத்துவ மாநாட்டை மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத்யெசோ நாயக் தொடங்கிவைத்தார்.
சென்னை,
‘சித்த மருத்துவத்தின் அங்கீகாரம் - சந்தர்ப்பங்களும், சவால்களும்’ என்ற தலைப்பில் தேசிய அளவில் சித்த மருத்துவ மாநாடு சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா கலையரங்கில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத்யெசோ நாயக் தொடங்கிவைத்து, விழா மலரை வெளியிட்டு பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய மருத்துவங்கள் அடங்கிய ஆயுஷ் துறையின் ஆராய்ச்சி நடவடிக்கைக்கும், சுகாதாரத்திற்கும் இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். இந்த ஆயுஷ் துறை மருத்துவத்தை மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்திவருகிறது. தேசிய அளவில் சித்த மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி ஆகியவற்றின் மருந்துகளை தரமானதாக தயாரிக்க உதவுகிறது.
பழமைவாய்ந்தது
சித்த மருத்துவம் தமிழ் பாரம்பரிய மருத்துவம். இது உலகில் மிகப்பழமை வாய்ந்ததாகும். சித்தர்களும் அதிக சக்தியுடன் விளங்கி உள்ளனர். அன்றாடம் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, இதயத்தை எப்படி பாதுகாப்பது என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ரத்தசோகை, கல்லீரல் செயலிழப்பு, தோல் நோய்கள், மூட்டு வலி, சிறுநீரக பிரச்சினைகள், கர்ப்பப்பை நோய்கள் ஆகியவற்றுக்கு சித்த மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகளும், மருந்துகளும் உள்ளன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றதுடன், 300 ஆராய்ச்சி கட்டுரைகளும் சமர்பிக்க உள்ளனர்.
இவ்வாறு மத்திய மந்திரி ஸ்ரீபாத்யெசோ நாயக் பேசினார்.
மாநாட்டில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் டாக்டர் கே.செந்தில்ராஜ், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குனர் டாக்டர் வி.பானுமதி, முன்னாள் இயக்குனர் டாக்டர் கே.மாணிக்கவாசகம், அறிவியல் ஆலோசனை வாரிய தலைவர் டாக்டர் ஜி.வேலுச்சாமி உள்பட பலர் பேசினார்கள். முடிவில் சித்த மருத்துவ ஆராய்ச்சி அதிகாரி டாக்டர் எஸ்.செல்வராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story