நாகை மீனவரை அரிவாளால் வெட்டிய இலங்கை கடற்கொள்ளையர்கள்


நாகை மீனவரை அரிவாளால் வெட்டிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 29 Sept 2018 3:15 AM IST (Updated: 29 Sept 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 2-வது நாளாக நாகை மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டி மீன்பிடி வலை-ஜி.பி.எஸ்.கருவிகளை பறித்து சென்றனர்.

நாகப்பட்டினம், 


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் விழுந்தமாவடியில் இருந்து 18 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இருந்து கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள், நாகை மீனவர்களை தாக்கி மீன்கள், படகில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் செருதூர் சிங்காரவேலர் குடியிருப்பை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு(வயது 48) சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த கந்தவேல்(26), முருகானந்தம்(19) ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரையில் இருந்து 18 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பேர், நாகை மீனவர்களை மறித்தனர்.

பின்னர் அவர்கள், நாகை மீனவர்கள் படகுக்கு வந்து அவர்களை சரமாரியாக தாக்கி படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி. பேட்டரி, செல்போன், டார்ச்லைட் மற்றும் மீன்பிடி வலைகளை பறித்தனர். அதை தடுக்க முயன்ற மீனவர் தமிழ்ச்செல்வனை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் தமிழ்ச்செல்வன் படகில் மயங்கி விழுந்தார். உடனே சக மீனவர்கள் தமிழ்ச்செல்வனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த பாரதிதாசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த செந்தில்(35), சந்திரமோகன்(38), திருநாவுக்கரசு(37) ஆகிய 3 பேரும், ஆறுகாட்டுத்துறையை சேர்்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த கேசவன்(35), பக்கிரிசாமி(35), ரெத்தினசாமி(40), உத்திராபதி(38) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க வலைகளை கடலில் விரித்து விட்டு படகிலேயே தூங்கி உள்ளனர்.

நேற்று காலை மீனவர்கள் கரை திரும்புவதற்காக வலையை எடுத்துள்ளனர். அப்போது வலைகளை காணவில்லை. இலங்கை கடற்கொள்ளையர்கள் வலைகளை அறுத்து சென்றது தெரிய வந்தது. 450 கிலோ எடையுள்ள இந்த வலைகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் வேதாரண்யம் மீனவர்கள் கரை திருப்பினர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த நகர செயலாளர் தங்க.கதிரவன் தலைமையில் அ.தி.மு.க.வினர், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவரை சந்தித்து ஆறுதல் கூறினர். அதேபோல் மதிவாணன் எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க.வினர், மீனவரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

2-வது நாளாக நாகை மீனவரை அரிவாளால் வெட்டி மீன்பிடிவலை மற்றும் ஜி.பி.எஸ்.கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்ற சம்பவம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story