அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகள் தியானம் செய்யும் சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்; கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்


அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகள் தியானம் செய்யும் சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்; கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Sept 2018 4:15 AM IST (Updated: 29 Sept 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையங்களில் கர்ப்பிணிகள் தியானம் செய்யும் சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தேசிய ஊட்டச்சத்து குறித்து மாநில அளவிலான கருத்தரங்கம் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

இதன் தொடக்க விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு அங்கன்வாடி ஊழியர்கள் மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்கள், பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர மனப்பான்மையில் செயல்பட வேண்டும். பொதுமக்கள் நம்மிடம் திட்டங்களை பெற வருபவர்கள் என்று கருதக்கூடாது. அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். பெண்களும், குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். உணவை மட்டும் உண்டுவிட்டு மனதில் குழப்பங்களுடன் இருந்தால் அது நல்ல சமுதாயத்தை உருவாக்காது.

ஒரு வீட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு மட்டும் ஊட்டச்சத்து முக்கியமானதல்ல. குடும்ப தலைவருக்கும் ஊட்டச்சத்து முக்கியமானதாகும். ஒரு குடும்பத்தில் தந்தை நோயுற்றவராக இருந்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளும் நோயுற்ற நிலையிலேயே வளரும். எனவே ஒரு குடும்பத்தில் தந்தையின் உணவு, சுகாதார பழக்க வழக்கங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. பல நோய்கள் குடும்ப பாரம்பரியத்தில் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பெண்கள் தங்களது குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்றால் தனது கணவரையும் ஆரோக்கியமாக இருக்கும் படி அறிவுறுத்த வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் குழந்தை ஊனத்துடன் பிறக்க நேரிடும். கர்ப்பணிகள் இசை, நடனம், கடவுள் வாழ்த்து, தியானம் போன்றவை செய்வதற்காக அங்கன்வாடி மையத்தில் நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உணவு உண்பதற்கு முன்பு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். அதன்பிறகு உணவு உண்ண வேண்டும். இது கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், அமைதியான மனநிலையையும் தரும்.

குடும்பபிரச்சினை காரணமாக அங்கன்வாடி மையத்திற்கு வரும் பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். பிறகு அவர்களை குடும்ப நல மையத்துக்கு அனுப்ப வேண்டும். ஊட்டச்சத்து திட்டமானது பெண்கள், குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் ஒரு குடும்பத்திற்கே ஆரோக்கியத்தை ஊட்டுவதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரியில் 9 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இருந்து தான் அதிக நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிறிய மாநிலமான புதுவையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால் ஆரோக்கியமாக வாழலாம். அந்த காலத்தில் ஏழை மக்கள் சத்தான உணவை சாப்பிட்டார்கள். தற்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டில் சமையல் செய்வதில்லை. அதனால், துரித உணவுகளை சாப்பிடுகின்றனர். அதுவும் ஒரு போன் செய்தால் போதும் வீட்டிற்கே உணவு வந்து விடுகிறது. அதனை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது.

பாலித்தீன் கவர்களில் சூடாக உணவை வைத்து வழங்குகின்றனர். இதனால், பாலித்தீன் கவரில் உள்ள கெமிக்கல் உணவில் கலக்கிறது. அந்த உணவை சாப்பிடுவதற்கு சுவையாகத்தான் இருக்கும். அதன்பிறகு புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் வரும். எனவே, இயற்கையான மற்றும் சத்தான உணவு பொருட்களை சாப்பிடும் பழக்கத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

கவர்னர் கிரண்பெடி நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்காக அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட கோப்புகளுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்கிறார். இதனால், மக்களுக்கு தரமான இலவச அரிசி வழங்க முடிகிறது. கவர்னரின் செயல்பாடுகளால் இன்று அரசு அதிகாரிகள் சரியாக செயல்படுகிறார்கள்.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் கவர்னர் செயல்பட்டு வருகிறார். அவர் சொன்னால் செய்வதுபோல், ஆட்சியாளர்கள் சொன்னாலும் செய்யும் மனப்பக்குவம் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வர வேண்டும். ஏனென்றால், இருவரும் சேர்ந்து செயல்பட்டால்தான் மாநிலத்தை முன்னேற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story