புதுவையில் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங்
புதுவையில் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.
புதுச்சேரி,
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் புதுவையை சேர்ந்த சிறுகுறு தொழில் நிறுவன வளர்ச்சி மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் 100 அடி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த விழாவிற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் தொழில் வளர்ச்சிக்கு அனைத்து முன்னணி வங்கிகளும் தடையின்றி கடன்களை அளிக்க வேண்டும். புதுவை கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பசுமாடு வளர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்தால் வரவேற்க தக்கது. காரணம் நெதர்லாந்து நாட்டில் மாட்டு சாணம் மூலம் துணி வகைகள் தயாரிக்கப்படுகிறது. புதுவையிலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளதால், மாடுகளை வளர்த்து அதன் சாணத்தில் இருந்து சோப்பு, கையால் தயாரிக்கப்படும் காகிதம் போன்றவற்றை தயாரிக்க முன்வரவேண்டும். தேங்காய்நாரில் இருந்து உரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறும், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
புதுவையில் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும். குறிப்பாக மருத்துவ சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாடு முழுவதும் 18 இடங்களில் தொழில்நுட்ப உதவி மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதுவையில் இதனை அமைக்கவும், வியாபாரிகள் வாழ்வாதார ஆய்வு மையத்தை புதுவை மாநிலத்தில் 2 மாவட்டங்களிலும் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவை தொழில் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல போராட்டங்களை சந்தித்து வருகிறது. காரணம் நிர்வாகத்திற்கும் அரசுக்கும் இடையேயான கோப்பு போக்குவரத்தில் பலநேரம் காலதாமதம் ஏற்படுகிறது. கோப்புகள் சுற்றுவதற்கு யார் காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். புதுவையில் சுற்றுலாவிற்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, நீர் விளையாட்டு, சொகுசு கடற்பயணம் போன்றவை மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும்.
ஆனால் கோப்புகள் சுற்றுவதின் காரணமாக அரசு நடவடிக்கையில் சிரமம் உள்ளது. இங்கு அனைவரும் மனம் திறந்திருக்க வேண்டும். அனைவரையும் நம்ப வேண்டும். அரசுக்கும் தொழில்நிறுவனங்களுக்குமான நல்லுறவு சிறப்பாக உள்ளது. அனைவருக்கும் சாதகமான அரசு புதுவையில் உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த மாதம் வெளிநாடு வாழ் இந்திய தொழில் முனைவோருக்கான மாநாடு புதுவையில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, இந்திய தொழில் கூட்டமைப்பு கிளை தலைவர் நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.