தொழில் அதிபரின் திருவையாறு, திருவாரூர் அரண்மனைகளில் சோதனை
சென்னையில் ரூ.100 கோடி மதிப்புடைய சிலைகள் மீட்கப்பட்ட தொழில் அதிபருக்கு சொந்தமான திருவையாறு, திருவாரூரில் உள்ள அரண்மனைகளில் சோதனை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தஞ்சாவூர்,
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெண்கல சிலைகள், கலைநயமிக்க கல் தூண்கள், பிள்ளையார், நந்தி உள்ளிட்ட 55 சிலைகள் என மொத்தம் 89 பழங்கால கலை பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.100 கோடியாகும்.
தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் திருவாரூரில் பழங்காலத்து அரண்மனைகள் உள்ளன. திருவையாறு காவிரி ஆற்றின் வடக்கு கரையில் உள்ள இந்த அரண்மனை மராட்டிய மன்னர் சரபோஜி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
இந்த அரண்மனையை பல ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கிய ரன்வீர்ஷா, அரண்மனையின் மேல்பகுதியில் கூரை அமைத்து பராமரித்து வருகிறார். மேலும் தனியாக பவுண்டேசன் நிறுவி இதன் சார்பில் ஆண்டுதோறும் 3 நாட்கள் திருவையாறில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். மரபுமாறா இசை நிகழ்ச்சி என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல திருவாரூரிலும் இவருக்கு பழங்கால அரண்மனை ஒன்று உள்ளது. இந்த 2 அரண்மனைகளிலும் காவலாளிகள் மட்டும் தற்போது உள்ளனர். இந்த அரண்மனைகளுக்குள் என்னென்ன வைக்கப்பட்டு உள்ளது என யாருக்கும் தெரியாது.
இந்த அரண்மனைகளில் என்ன இருக்கிறது என சோதனை நடத்தப்படுமா? என சிலை கடத்தல் பிரிவு போலீசாரிடம் கேட்டபோது, தற்போது சென்னையில் சோதனை நடைபெற்று வருகிறது. இவை முடிந்த பின்னர் கோர்ட்டில் அனுமதி பெற்று திருவையாறு, திருவாரூரில் சோதனை நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story