‘ரமணா’ பட பாணியில் இறந்த கண்டக்டருக்கு 3 நாட்களாக சிகிச்சை


‘ரமணா’ பட பாணியில் இறந்த கண்டக்டருக்கு 3 நாட்களாக சிகிச்சை
x
தினத்தந்தி 29 Sept 2018 3:15 AM IST (Updated: 29 Sept 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தனியார் மருத்துவமனையில் இறந்த நாகையை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டருக்கு 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சாவூர், 


நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா கீழஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது 55). இவர் அரசு பஸ் கண்டக்டராக நாகை பணிமனையில் வேலை செய்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நாகை வெளிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ந் தேதி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நாகையில் சிகிச்சை அளித்த டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து 11-ந் தேதி தஞ்சையில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையில் சேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக நேற்று மதியம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் சேகர் இறந்து 3 நாட்களாகி விட்டது என்ற தகவலை தெரிவித்தனர். இதனைக்கேட்டு அவருடைய குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.இறந்தவரை உயிருடன் இருப்பதாக கூறி பணம் வசூலித்து அந்த தனியார் மருத்துவமனை தங்களை ஏமாற்றி விட்டதே என அவருடைய குடும்பத்தினர் வேதனை அடைந்தனர்.

இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேகரின் மகன் சுபாஷ், தஞ்சை தெற்கு போலீசில் நேற்று மாலை புகார் கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகையில் சிகிச்சை அளித்த டாக்டர் பரிந்துரைத்ததன் பேரில் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் என்னுடைய தந்தையை சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கு சிகிச்சைக்காகவும், மருந்து செலவுக்காகவும் ரூ.5½ லட்சம் வரை செலவானது. இதற்கு மேல் செலவழிக்க முடியாத நிலையிலும், சந்தேகத்தின் பேரிலும் என்னுடைய தந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கும்படி கேட்டோம்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ரூ.2½ லட்சம் பாக்கி உள்ளது என்றும், அந்த தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதையடுத்து உறவினர்கள், நண்பர்களிடம் ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என வசூலித்து மொத்தம் ரூ.50 ஆயிரம் பெற்று மருத்துவமனையில் கட்டினோம். இதைத்தொடர்ந்து எனது தந்தையை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அந்த தனியார் மருத்துவமனை அனுமதித்தது. இதனால் அங்கிருந்து எனது தந்தையை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அப்போது அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து 3 நாட்களாகி விட்டது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார், அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இறந்த சேகருக்கு திலகவதி(45) என்ற மனைவியும், சுபாஷ்(24), சரவணன்(23) என 2 மகன்களும், முத்துமீனா(21) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இறந்தவருக்கு 3 நாட்களாக சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை பற்றிய சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story