திருவாரூர் மாவட்டத்தில் 320 மருந்து கடைகள் அடைப்பு
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை தடை செய்யக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 320 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. வணிகர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
மத்திய அரசு, ஆன்லைன் மூலமாக மருந்துகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தரம் குறைந்த மருந்துகள், போதை மருந்துகள் தாராளமாக புழக்கத்தில் வரும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக டாக்டரின் பரிந்துரை சீட்டுபடி மருந்துகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது சட்ட விதியாக உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையில் விதிமீறல்கள் ஏற்படும்.
மேலும் மருந்து கடை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆன்லைன் மூலமாக மருந்து விற்பனை தடை செய்யக்கோரி நாடு தழுவிய அளவில் மருந்து கடை வணிகர்கள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூரில் மருந்து வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் நகரில் 40 மருந்துகடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் 320 மருந்து கடைகள் அடைக்கப்பட்டதால் நோயாளிகள், அவசர தேவைக்கு பொதுமக்கள் மருந்துகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
Related Tags :
Next Story