ஆன்-லைன் வணிகத்தை எதிர்த்து 1,200 மருந்து கடைகள் அடைப்பு
ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து கடலூர் மாவட்டம் முழுவதும் 1,200 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. கடலூரில் மருந்து வணிகர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகத்தில் மருந்து கடைகள் அடைக்கப்படும் என்றும், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து நேற்று கடலூர் மாவட்டத்தில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.
கடலூரில் நேதாஜி தெரு, பாரதிசாலை, லாரன்ஸ்ரோடு, சுப்புராயலுசெட்டித்தெரு, செம்மண்டலம், புதுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் மருந்து கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இருப்பினும் மருத்துவமனைகளோடு சேர்ந்து இருந்த மருந்து கடைகள் திறந்து இருந்ததால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
இதையடுத்து மாவட்ட தலைநகரான கடலூரில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரபாண்டியன், பொருளாளர் வேங்கடசுந்தரம், நிர்வாகிகள் குருமூர்த்தி, தியாகராஜன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நிர்வாகிகள் முருகாலயா கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன், நடராஜன், கார்த்திக் மற்றும் பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாசலம், பெண்ணாடம், சிதம்பரம் உள்பட மாவட்டம் முழுவதில் இருந்தும் மருந்து கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆன்-லைன் மருந்து வணிகம் கூடாது. அவசர தேவைக்கு ஆன்-லைனில் மருந்து வாங்க முடியாது. மருந்துகள் தரம் பற்றி உறுதி செய்ய இயலாது. மருந்துகள் தவறாக உபயோகிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே ஆன்-லைன் மருந்து வணிகத்துக்கு மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று கோஷமிட்டனர்.
இது பற்றி மாவட்ட தலைவர் கதிர்வேல் கூறுகையில், ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து மாவட்டம் முழுவதும் 1,200 மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. மருத்துவமனைகளோடு சேர்ந்து இருக்கும் 100 மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் ரூ.50 லட்சம் மருந்து வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மாநில சங்கம் முடிவு செய்து அறிவித்தால் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவோம் என்றார்.
Related Tags :
Next Story