மங்கலம்பேட்டை அருகே: மின்னல் தாக்கி இளம்பெண் பலி
மங்கலம்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் இளம்பெண் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரேகா (வயது 25). நேற்று இவர் அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது அண்ணன் ராஜாராமனின் மனைவி கஸ்தூரியை(30) பார்ப்பதற்காக சென்றார். அங்கு ரேகாவும், கஸ்தூரியும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வானில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் தூறல் விழ ஆரம்பித்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த ரேகா, கஸ்தூரி மற்றும் அருகில் நின்ற அதே பகுதியை சேர்ந்த பரமசிவம்(45) ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் ரேகா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த கஸ்தூரி, பரமசிவம் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து அறிந்த விருத்தாசலம் வருவாய் துறையினர் விரைந்து வந்து ரேகாவின் சாவு குறித்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story