செத்துபோன குட்டியின் அருகே 2 நாட்கள் நின்றிருந்த தாய் யானை விரட்டியடிப்பு: குட்டியின் உடல் மீட்பு
சக்லேஷ்புரா அருகே செத்துப்போன குட்டி யானை உடலை எடுக்கவிடாமல் 2 நாட்களாக பாசப்போராட்டம் நடத்திய தாய் யானையை வனத்துறையினர் நேற்று வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
ஹாசன்,
சக்லேஷ்புரா அருகே செத்துப்போன குட்டி யானை உடலை எடுக்கவிடாமல் 2 நாட்களாக பாசப்போராட்டம் நடத்திய தாய் யானையை வனத்துறையினர் நேற்று வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் குட்டி யானை பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை நடத்தினர்.
குட்டி யானை செத்தது
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா எசலூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமம், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி காட்டு யானைகள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி அதிகாலை 12 காட்டு யானைகள் வந்தன. அதில் கருத்தரித்து இருந்த பெண் யானையும் வந்தது.
அந்த யானைகள் அதே பகுதியை சேர்ந்த பொன்னப்பா என்ற விவசாயியின் தோட்டத்தில் புகுந்து நெற்பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தியபடி இருந்தது. அந்த சமயத்தில் கருத்தரித்து இருந்த பெண் யானை திடீரென்று குட்டியை ஈன்றது. ஆனால் குட்டி யானை பிறந்த சில நிமிடத்திலேயே பரிதாபமாக செத்தது.
தாய் யானையின் பாசப்போராட்டம்
ஆனால் குட்டி யானையை விட்டு செல்ல மனம் இல்லாத தாய் யானை, அதன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தது. மேலும் குட்டி யானையை தனது காலால் எட்டி உதைத்தும், தும்பிக்கையால் தூக்கியும் பார்த்தப்படி சுற்றி சுற்றி வந்தது. இதுபற்றி அறிந்த கிராம மக்கள் எசலூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் செத்துப்போன குட்டி யானையை விட்டு செல்லாமல் தாய் யானை பாசப் போராட்டம் நடத்திய காட்சி அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
இதனால் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதற்கிடையே வனத்துறையினரும் அங்கு வந்து தாய் யானையை விரட்டி, செத்துப்போன குட்டியானையின் உடலை எடுக்க முயன்றனர். ஆனால் குட்டியின் உடலை எடுக்கவிடாமல் தாய் யானை வனத்துறையினரை துரத்தியது. மேலும் குட்டி யானையின் உடலை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தனது காலால் உதைத்தபடி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. தாய் யானையை, உடன் வந்த மற்ற யானைகள் ஆசுவாசப்படுத்தின. இந்த காட்சி உருக்கமாக இருந்தது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி, காண்போரின் கண்களை குளமாக்கியது.
விரட்டியடிப்பு- குட்டி யானை உடல் மீட்பு
இருப்பினும் 2 நாட்களாக வனத்துறையினர், செத்துப்போன குட்டி யானையின் உடலை எடுக்க தீவிர முயற்சியில் இறங்கினர். ஆனால் தாய் யானையின் பாசப்போராட்டத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று வனத்துறையினர் தாய் யானையை விரட்ட பட்டாசு வெடிக்க முடிவு செய்தனர். அதன்படி வனத்துறையினர் பட்டாசு வெடித்து தாய் யானையை அங்கிருந்து விரட்டும் முயற்சியில் இறங்கினர். இருப்பினும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகே தாய் யானை, குட்டி யானையின் உடலை விட்டு நகர்ந்து சென்றது.
அதன்பின்னர் குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். அதையடுத்து கால்நடை மருத்துவர் முரளி வரவழைக்கப்பட்டார். அவர் குட்டி யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தார். பிறகு அதே பகுதியில் குழி தோண்டி, குட்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.
கிராம மக்கள் நெகிழ்ச்சி
இதற்கிடையே தாய் யானை அதே பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தது. 2 நாட்களாக செத்துப்போன குட்டி யானையின் உடலை விட்டு பிரிய மனமில்லாமலும், அதன் அருகே யாரையும் விடாமலும் தாய் யானை பாசப்போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வுகளை அந்தப் பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
Related Tags :
Next Story