ஆன்-லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகள் அடைப்பு


ஆன்-லைன் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 29 Sept 2018 4:14 AM IST (Updated: 29 Sept 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மருந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

புதுக்கோட்டை,

ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. அவ்வாறு அனுமதி அளித்தால், ஆன்-லைன் மூலம் அனுப்பி வைக்கும் போது மருந்துகள் மாறி விடுவதற்கும், காலக்கெடு முடிந்த மருந்துகளை அனுப்பி விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் வயாகரா, தூக்க மாத்திரைகளை மாணவ மாணவிகள் பெற்றோருக்கு தெரியாமல் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.எனவே ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று மருந்து கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது எனவும், ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுக்கோட்டை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று கருப்பு பட்டை அணிந்தவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொதுமக்களின் நலனுக்கு எதிராக ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் உரிமத்தை மத்திய அரசு அனுமதிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் வீனஸ் ராஜேந்திரன், செயலாளர் முத்துராமன், பொருளாளர் சலீம் உள்பட சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மருந்துகடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி திலகர் திடல் பகுதியில் புதுக்கோட்டை டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story