மின்னல் தாக்கி கூட்டுறவு வங்கியின் மேற்கூரை சேதம்
நிலக்கோட்டையில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கூட்டுறவு வங்கியின் மேற்கூரை சேதம் அடைந்தது.
நிலக்கோட்டை,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.50 மணி முதல் இரவு சுமார் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. நீண்டநாட்களுக்கு பிறகு பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை காரணமாக நிலக்கோட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் யாரும் வெளியே வரமுடியாமல் உள்ளேயே இருந்தனர். பின்னர் மழை குறைந்தவுடன் மேலாளர், ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். வங்கியின் காவலாளி மட்டும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இந்த நிலையில் இரவு சுமார் 10 மணி அளவில் கூட்டுறவு வங்கி கட்டிடம் மீது மின்னல் தாக்கியது. இதன் காரணமாக வங்கியின் மேற்கூரை லேசாக இடிந்து விழுந்தது. இதில் வங்கி மேலாளர் அறையின் இருக்கை, கம்ப்யூட்டர் மற்றும் ஏசி எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. நல்லவேளையாக மேலாளர் மற்றும் ஊழியர்கள் புறப்பட்டு சென்ற பின்னர் மின்னல் தாக்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சேதமதிப்பு குறித்து நேற்று திண்டுக்கல்லில் இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story