கன்டெய்னர் லாரி-டிராக்டர் மோதல்: டிராக்டர் டிரைவர் சாவு பாறைகள் விழுந்ததில் 5 ஆடுகள் இறந்தன
சுங்குவார்சத்திரம் அருகே கன்டெய்னர் லாரி-டிராக்டர் மோதிய விபத்தில் டிராக்டர் டிரைவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
வாலாஜாபாத்,
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சந்தவேலூர் சந்திப்பு அருகே சென்னையை நோக்கி கருங்கல் பாறையை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.
அந்த லாரி சந்தவேலூர் சந்திப்பில் வந்தபோது எதிரே வந்த ஒரு டிராக்டருடன் பயங்கரமாக மோதியது.
இதில் டிராக்டரை ஓட்டிவந்த அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (வயது 46) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் சரவணன் (31) என்பவரும் படுகாயம் அடைந்தார்.
டிரைவர் சாவு
விபத்தின்போது கன்டெய்னர் லாரியில் இருந்த கருங்கல் பாறை அருகிலிருந்த அண்ணாமலை என்பவரின் ஆட்டு கொட்டகை மீது விழுந்ததில், அங்கு இருந்த 5 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த கன்டெய்னர் லாரி டிரைவர் சரவணனை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த டிராக்டர் டிரைவர் கருணாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
விபத்தின் காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story