சிறுவன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு கார் ஓட்டத்தடை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை


சிறுவன் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பெண்ணுக்கு கார் ஓட்டத்தடை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Sept 2018 5:15 AM IST (Updated: 29 Sept 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

சிறுவன் மீது காரை ஏற்றிய பெண்ணுக்கு, மும்பையில் கார் ஓட்ட தடை விதித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

மும்பை, 

சிறுவன் மீது காரை ஏற்றிய பெண்ணுக்கு, மும்பையில் கார் ஓட்ட தடை விதித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

சிறுவன் மீது காரை ஏற்றிய பெண்

மும்பை கோரேகாவ் கிழக்கு, சத்குரு காம்ப்ளக்ஸ் குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று 8 வயது சிறுவன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி கொண்டு இருந்தான். அப்போது சிறுவன் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் அருகே நின்று அவிழ்ந்த ‘ஷூ’ கயிற்றை கட்டிக்கொண்டு இருந்தான். அந்த நேரத்தில் சிறுவனுக்கு பின்னால் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காரை ஓட்டிவந்த 42 வயது பெண் ஒருவர், காரை சிறுவன் மீது ஏற்றினார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

எனினும் பெண் சிறுவன் மீது காரை ஏற்றும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து ஜாமீனில் விட்டனர்.

கார் ஓட்டத்தடை

இந்தநிலையில் போரிவிலி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சிறுவன் மீது காரை ஏற்றிய பெண் மீது நடவடிக்கை எடுத்து உள்ளார். அவர் அந்த பெண் மும்பையில் கார் ஓட்ட தடை விதித்து உள்ளார்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி கூறுகையில், ‘‘விபத்தை ஏற்படுத்திய பெண் சத்தீஸ்கர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2001-ம் ஆண்டு ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளார். அவர் வெளிமாநிலத்தில் ஓட்டுனர் உரிமம் பெற்று இருப்பதால் அதை உடனடியாக எங்களால் ரத்து செய்ய முடியவில்லை.

எனினும் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். அவர் விளக்கம் கொடுத்த பிறகு அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சத்தீஸ்கர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சிபாரிசு செய்வோம்’’ என்றார்.

Next Story