திருச்சி மாவட்டத்தில் 1,350 மருந்து கடைகள் அடைப்பு ரூ.2 கோடி வருவாய் பாதிப்பு


திருச்சி மாவட்டத்தில் 1,350 மருந்து கடைகள் அடைப்பு ரூ.2 கோடி வருவாய் பாதிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2018 5:02 AM IST (Updated: 29 Sept 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைன் வர்த்தகத்துக்கு எதிராக திருச்சி மாவட்டத்தில் 1,350 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி,

மருந்து வணிகத்தை ஆன்-லைன் மூலம் விற்பதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் முடிவினை எதிர்த்து தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் நேற்று ஒருநாள் மருந்து கடைகள் மற்றும் மொத்த மருந்து விற்பனை கடைகளை அடைத்து மருந்து வணிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகரில் மட்டும் 600 மருந்து கடைகளும், 150 மொத்த விற்பனை மருந்து வினியோக கடைகளும், புறநகர் மாவட்டப்பகுதியான மணப்பாறை, தொட்டியம், திருவெறும்பூர், முசிறி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் 600 மருந்து கடைகள் என மாவட்டம் முழுவதும் 1,350 மருந்து கடைகள் நேற்று காலை முதல் அடைக்கப்பட்டிருந்தன. பகலில் மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் தேவையான மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர். அதே வேளையில் மாலை 6 மணிக்கு பின்னர் அனைத்து மருந்து கடைகளும் திறக்கப்பட்டன.

இது குறித்து திருச்சி மாவட்ட மருந்து வணிகர் சங்க செயலாளர் ஏ.பாஸ்கரன் கூறியதாவது:- திருச்சி மாவட்டத்தில் மருந்து கடைகள் ஒருநாள் அடைக்கப்பட்டதன் காரணமாக ரூ.1½ கோடி முதல் ரூ.2 கோடிவரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்-லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமான செயல் அல்ல. ஏனென்றால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே விற்க வேண்டிய மருந்துகள், தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்க கூடிய சூழ்நிலை உருவாக ஆன்-லைன் வர்த்தகம் காரணமாக உள்ளது.

மேலும் போலி மருந்துகள் புழக்கத்தில் விடவும் வாய்ப்பாக அமைந்து விடும். ஆன்-லைன் ஆதிக்கம் உருவானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகி விடும். மேலும் மருந்து தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் உறுப்பினர்களும், மறைமுகமாக 40 லட்சம் தொழிலாளர்களும் மற்றும் 1 கோடியே 50 லட்சம் குடும்ப உறுப்பினர்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story