பா.ஜனதா கையில் எடுத்துள்ள ‘ஆபரேஷன் தாமரை’ இனி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை தேவேகவுடா பேட்டி


பா.ஜனதா கையில் எடுத்துள்ள ‘ஆபரேஷன் தாமரை’ இனி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 30 Sept 2018 4:30 AM IST (Updated: 29 Sept 2018 11:48 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கையில் எடுத்துள்ள ‘ஆபரேஷன் தாமரை’ இனி ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

பா.ஜனதா கையில் எடுத்துள்ள ‘ஆபரேஷன் தாமரை’ இனி ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் தாமரை

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதாவினர் ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்தனர். ஆனால் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாததால் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்தது. அதுபோல, நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலிலும் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் கவுன்சிலர்களை பா.ஜனதா பக்கம் இழுக்க முயன்றும் தோல்வியில் முடிந்தது.

இதனால் மேயர், துணை மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் வெற்றி பெற்றது. இதுகுறித்து ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவர் தேவேகவுடாவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

வெற்றி பெறப்போவதில்லை

“பா.ஜனதா கட்சியினர் கடந்த 2008-ம் ஆண்டு ஆபரேஷன் தாமரையை கையில் எடுத்தனர். இன்று வரை ‘ஆபரேஷன் தாமரை’ தொடர்ந்து வருகிறது. பா.ஜனதா கையில் எடுத்துள்ள ‘ஆபரேஷன் தாமரை’ இனிமேல் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. தோல்வியே அவர்களுக்கு கிடைக்கும். ஆபரேஷன் தாமரையால் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்கலாம். பெங்களூரு மாநகராட்சிக்கு நடந்த மேயர், துணை மேயர் தேர்தல் பற்றி நான் அதிக கவனம் செலுத்தவில்லை. கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது, கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் சென்று தரிசனம் செய்வார்கள். கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்கு செல்வதில்லை”

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story